ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்

by Staff Writer 11-12-2018 | 4:46 PM
Colombo (News 1st) தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்துகொண்டு அரச நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதால், ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில், யாதுரிமை எழுத்தாணை உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிலா கோனவல இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ரணில் விக்ரமசிங்க லேக் ஹவுஸ் பிரின்டர்ஸ் அன்ட் பப்லிஷர்ஸ் குழுமத்தின் (Lake House Printers and Publishers) பங்குதாரர் எனவும் 2014 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகளில் அவரது பெயர் நிறுவனத்தின் 9 ஆவது அதிகூடிய பங்குகள் உடையவராகக் குறிப்பிடப்பட்டுள்ளதெனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் ஊடாக அரச நிறுவனங்களாக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றுக்கு காசோலை புத்தகங்கள், ஊழியர் அடையாள அட்டை, கடனட்டைகள் மற்றும் கணக்கு அட்டைகளை குறித்த நிறுவனம் அச்சிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தனிப்பட்ட ரீதியில் இந்த ஒப்பந்தங்களின் ஊடாக பிரதிவாதியான ரணில் விக்ரமசிங்க இலாபமீட்டியுள்ளதாக ஷர்மிலா கோனவல தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 91 /1 (இ ) சரத்திற்கு அமைய ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரணை செய்து, இது தொடர்பில் யாதுரிமை எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியுள்ள மனுதாரர், மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட இடைக்காலத் தடை விதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். ரணில் விக்ரமசிங்க, அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட ஐவர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.