டெஸ்ட் அரங்கில் 900 புள்ளிகளைப் பெற்றார் கேன் வில்

டெஸ்ட் அரங்கில் 900 புள்ளிகளைப் பெற்ற முதலாவது நியூசிலாந்து துடுப்பாட்ட வீரராக கேன் வில்லியம்சன் பதிவு

by Staff Writer 11-12-2018 | 5:08 PM
டெஸ்ட் அரங்கில் 900 புள்ளிகளைப் பெற்ற முதலாவது நியூசிலாந்து துடுப்பாட்ட வீரராக அணித்தலைவர் கேன் வில்லியம்சன் பதிவானார். டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் 913 புள்ளிகளோடு இரண்டாமிடத்திற்கு முன்னேறியதன் மூலம் கேன் வில்லியம்சன் இந்த சிறப்பைப் பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தமையே கேன் வில்லியம்சனின் இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. அவர் அந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 89 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 139 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். இந்த துடுப்பாட்ட ஆளுமையானது 10 வருடங்களுக்கு பின்னர் ஆசிய மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரொன்றைக் கைப்பற்றுவதற்கும் ஏதுவாக அமைந்திருந்தது. அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அடிலெய்டில் நேற்று (10) நிறைவுக்கு வந்த முதல் டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த செட்டிஸ்வர் புஜாரா டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் 846 புள்ளிகளோடு நான்காமிடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓராண்டு போட்டித்தடையை எதிர்கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவரான ஸ்டீவன் ஸ்மித் இந்த பட்டியலில் இன்னும் மூன்றாமிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணித்தலைவரான விராட் கோஹ்லி 920 புள்ளிகளோடு டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் ஆறாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். தென்னாபிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா இந்தப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.