ஜனாதிபதி கொலை சதி: நாலக்க டி சில்வாவின் பிணை கோரிக்கை தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

by Staff Writer 11-12-2018 | 8:25 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோரை வடக்கு, கிழக்கு பகுதிகளில் வைத்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இந்திய பிரஜை ஆகியோர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இன்றைய வழக்கு விசாரணையின் போது முதலாவது சந்தேகநபரான இந்திய பிரஜையை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்குமாறு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று மன்றில் ஆஜராகாமையினால் அவர்களை மீண்டும் வேறொரு தினத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் அறிவித்தல் பிறப்பித்தார். பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா முன்வைத்துள்ள பிணை கோரிக்கை தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அதுவரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.