கீத் நொயார் கடத்தல் தொடர்பான விசாரணை நிறைவு

கீத் நொயார் கடத்தல் தொடர்பான விசாரணை நிறைவு: குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவிப்பு

by Staff Writer 11-12-2018 | 4:10 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்தித் தாக்கியமை தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. குறித்த வழக்கு விசாரணை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க முன்னிலையில் இன்று இடம்பெற்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக ஆலோசனைகளுக்காக விடயங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மன்றில் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள உளவுப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அமல் கருணாசேகர உள்ளிட்ட உளவுப்பிரிவின் அதிகாரிகள் 7 பேரும் இன்று மன்றில் முன்னிலையாகியிருந்தனர். வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.