போர்ப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் கோஹ்லி முதலிடம்

விலைமதிப்பு மிக்க விளையாட்டு வீரர்களின் பட்டியலில் விராட் கோஹ்லி முதலிடம்

by Staff Writer 10-12-2018 | 7:18 PM
இந்தியாவின் விலைமதிப்பு மிக்க விளையாட்டு வீரர்களின் பட்டியலை 'போர்ப்ஸ் சஞ்சிகை' வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் வருட வருமானம் இந்திய ரூபாவில் 228.09 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது இலங்கை ரூபாவில் 571.02 ​கோடி ரூபாவாகும். இதேநேரம், விராட் கோஹ்லியின் கடந்த வருட வருமானமானது 100.70 கோடி இந்திய ரூபாவாகக் காணப்பட்டதோடு, அது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், குறித்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கும் இந்திய அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனியின் வருட வருமானம் 101.77 கோடி இந்திய ரூபாயாக காணப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரும் மாஸ்டர் பிளாஸ்டருமான சச்சின் டென்டுல்கருக்கு இந்த பட்டியலில் மூன்றாமிடம் கிடைத்துள்ளதோடு, அவரது வருட வருமானம் 80 கோடி இந்திய ரூபாவாகும். அத்தோடு, நட்சத்திர பெட்மின்ட்டன் வீராங்கனையான பி.வி. சிந்து இந்த பட்டியலில் நான்காமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் மகளிர் ஒற்றையர் பெட்மின்ட்டன் போட்டியில் பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டவராவார். அவரது வருட வருமானம் இந்திய ரூபாவில் 36.50 கோடியாகப் பதிவாகியுள்ளது.