மரணதண்டனைக் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து

மரணதண்டனை கைதிகள் குறித்த ஆவணங்களின் தாமதமே தீர்மானம் தாமதமாவதற்கு காரணம் - ஜனாதிபதி

by Staff Writer 10-12-2018 | 6:56 PM
Colombo (News 1st) மரணதண்டனை வழங்கப்படவேண்டியவர்கள் தொடர்பிலான அறிக்கைகளைக் கோரும்போது, ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டிய நிறுவனங்கள் உரியமுறையில் செயற்படாமையினால், தீர்மானங்களை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரம் ஒழிப்பு மற்றும் குற்றங்களைக் குறைப்பது தொடர்பிலான சட்ட திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த ஆவணங்களைத் தாமதப்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலைகளில் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையின் உதவியை பெற்றுக்கொள்வது, வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளை பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவது, விஷ ​போதைப்பொருள் கட்டளைச்சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச்சட்டம் உள்ளிட்ட கட்டளைச் சட்டங்களைத் திருத்துவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்தபோதிலும், அதனைக் காண்பிக்கத் தவறியமை மற்றும் சமர்ப்பிக்கத் தவறியமை என்பவற்றை குற்றமாக கருதி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.