நீர் கட்டணத்தின் அதிகரிப்பு அவசியமானதா?

நீர் கட்டணத்தை அதிகரிக்கவேண்டிய அவசியமில்லை

by Staff Writer 09-12-2018 | 1:29 PM
Colombo (News 1st) நீர் வீண்விரயமாவதைக் கட்டுப்படுத்தும் பட்சத்தில், கட்டணத்தை அதிகரிக்கவேண்டிய அவசியமில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வினூடாக இந்த விடயம் கண்டறியப்பட்டதாக, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார். நீர் பயன்பாடு முறையாக பதிவுசெய்யப்படாமையே, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு நட்டம் ஏற்படுவதற்கான காரணம் என இதன்போது கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். மேல் மாகாணத்திலும் நீரின் பயன்பாடு குறித்து முறையாகப் பதிவாகுவதில்லை என தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்ட விளக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் ஏற்படும் நீர்விரயம் கட்டுப்படுத்தப்படுமாயின், 1,200 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என கணக்காய்வாளர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படாது எனவும் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார்.