அவதானமாக செயற்படுமாறு மக்களுக்கு வலியுறுத்தல்

ஆறுகள், குளங்களை அவதானமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வலியுறுத்தல்

by Staff Writer 09-12-2018 | 7:26 AM
Colombo (News 1st) மழையுடனான வானிலை நிலவுகின்ற நிலையில், குளங்கள் மற்றும் ஆறுகளை பயன்படுத்தும்போது, அவதானமாக செயற்பட வேண்டுமென இடர்முகாமைத்துவ நிலையம், மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அதேநேரம், பாடசாலை விடுமுறைக் காலத்தில் சுற்றுலா சென்று, பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, நாளாந்தம் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை 3 முதல் ஐந்தாக பதிவாகுவதாக நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், கடந்த 6 மாதங்களில் மாத்திரம் நீரில் மூழ்கி 349 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 58 பெண்களும் அடங்குகின்றனர். இதேவேளை, மகாவலி கங்கையில் குளிப்பதற்குச் சென்று காணாமற்போன இளைஞர் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டி - பல்லேகம பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த இளைஞருடன் நீரில் அடித்துச்செல்லப்பட்ட யுவதியொருவரும் மற்றுமொரு இளைஞரும் பிரதேச மக்களால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.