ஜெயலலிதா மரணம்: சசிகலாவிடம் நேரில் விசாரணை

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் சசிகலாவிடம் நேரில் விசாரணை

by Bella Dalima 08-12-2018 | 3:49 PM
Colombo (News 1st) சிறையில் உள்ள சசிகலா நடராஜன் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளதால் அவரை நேரில் ஆஜர்ப்படுத்துமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அந்நிய செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரணை செய்வதற்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரணை செய்யும் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையகத்தால், தமிழக உள்துறை செயலாளர் மற்றும் கர்நாடக சிறைத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக கர்நாடக மாநில சிறைத்துறைக்கு ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், சசிகலாவிடம் விசாரணை நடத்துவது குறித்து தமிழக உள்துறைக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவிடம் முதல்முறையாக நேரில் விசாரணை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.