காமினி செனரத் வௌிநாடு செல்ல அனுமதி

லிட்ரோ கேஸ் நிறுவன மோசடி: காமினி செனரத் வௌிநாடு செல்ல விசேட மேல்நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 07-12-2018 | 4:09 PM
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரி காமினி செனரத்திற்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வௌிநாடு செல்ல விசேட மேல்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்திற்கு செல்வதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பதிரிகையின் கீழ் காமினி செனரத்திற்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், வாக்குமூலமளிப்பதற்காக இன்று மன்றில் ஆஜராகிய சாட்சியாளர்களை அன்றைய தினம் ஆஜராகுமாறு சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் ச்சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதியரசர்கள் குழாம் இன்று அறிவித்துள்ளது.