ரூ.260,000 பெறுமதியான பாராளுமன்ற சொத்துக்கள் சேதம்

பாராளுமன்ற மோதலால் 260,000 ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்

by Staff Writer 07-12-2018 | 4:53 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையினால் சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா வரை பாராளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒலிவாங்கிகளுக்கு மாத்திரம் 2 இலட்சத்து 30 ஆயிரம் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தவிர பாராளுமன்றத்திலுள்ள இரண்டு தூண்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் பொறியியலாளர் பிரிவினால் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பாராளுமன்ற நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலையின் போது, சில புத்தகங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெறுமதி வாய்ந்த புத்தகங்களே சேதமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட 6 பேரடங்கிய குழு எதிர்வரும் 12 ஆம் திகதி கூடவுள்ளது. பொருத்தப்பட்டிருந்த கமராக்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட காட்சிகள் கூட்டத்தின் போது காட்சிப்படுத்தப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். இதன் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். சபாநாயகர் கரு ஜயசூரியவினால் எதிர்வரும் 29 ஆம் திகதி நியமிக்கப்பட்ட குறித்த குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஸ, சந்திரசிறி கஜதீர, ரஞ்சித் மத்தும பண்டார, பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.