கைபேசியுடன் தேர்வுக்கு தோற்றியவர் கைது

கையடக்கத் தொலைபேசியுடன் தேர்வுக்கு தோற்றிய மாணவரும் உதவிய ஆசிரியரும் கைது

by Staff Writer 07-12-2018 | 5:03 PM
Colombo (News 1st) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திய மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவருக்கு உதவி புரிந்த ஆசிரியர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (06) இடம்பெற்ற ஆங்கிலப் பரீட்சையின் போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பலாங்கொடையில் உள்ள பரீட்சை நிலையத்தில் தோற்றிய மாணவர் ஒருவர், பிறிதொரு பாடசாலையின் பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றிய ஆசிரியர் ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்பி பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பரீட்சையில் பதிலளிப்பதற்கு ஆசிரியர் குறுந்தகவல்கள் மூலம் உதவியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜிதவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. சம்பவம் தொடர்பிலான உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.