கனடாவில்  சீன தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரி கைது 

கனடாவில் கைதான சீன தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்

by Bella Dalima 07-12-2018 | 6:25 PM
Colombo (News 1st) கனடாவில் கைது செய்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிதிப்பிரிவு தலைவர் மெங் வான்ஸூ (Meng Wanzhou) வான்கூவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்ற நிலையில், பிணை விசாரணை ஒன்றுக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். அமெரிக்காவினுடைய கோரிக்கைக்கு அமைய, தொலைத்தொடர்பு நிறுவன ஸ்தாபகரின் மகளும், நிதிப்பிரிவுத் தலைவருமாகிய 46 வயதான மெங் வான்ஸூ என்பவர் கடந்த முதலாம் திகதி வான்கூவர் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர் கைது செய்யப்பட்ட விடயத்தினை கடந்த புதன்கிழமையே (5) கனேடிய அதிகாரிகள் வௌிப்படுத்தியிருந்தனர். தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிதிப்பிரிவின் தலைவர் கைது செய்யப்பட்டமைக்கு பல்வேறு விமர்சனங்கள் வௌிவந்திருந்த நிலையில், முதன்முதலாக இது தொடர்பில் கருத்து வௌியிட்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த சம்பவத்துடன் தமது அரசாங்கத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லையென தெரிவித்துள்ளார். எனினும், குறித்த கைது நடவடிக்கையை மனித உரிமை மீறல் எனத் தெரிவித்துள்ள சீனா, அவரின் விடுதலையை வலியுறுத்தியுள்ளது.