பாராளுமன்றம் கலைப்பு: வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்காலத்தடை அமலில் இருக்கும்

பாராளுமன்றம் கலைப்பு: வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்காலத்தடை அமலில் இருக்கும்

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2018 | 7:25 pm

Colombo (News 1st) ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்காலத்தடை உத்தரவு அமலில் இருக்கும் என உயர்நீதிமன்றம் இன்று அறிவித்தது.

பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட நீதியரசர் குழாம்  இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று நிறைவடைந்தன.

ஜனாதிபதி மேற்கொள்ளும் எந்த ஒரு நிறைவேற்றதிகார மற்றும் நிர்வாக செயற்பாட்டிற்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யும் இயலுமை இலங்கை பிரஜை ஒருவருக்கு மாத்திரமன்றி வௌிநாட்டவராலும் முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எஸ். கனக ஈஸ்வரன் இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார மற்றும் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பில் அரசியல் அமைப்பின் 126 ஆவது பிரிவின் கீழ் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்ய முடியாது என சட்ட மா அதிபர் குறிப்பிட்டாலும், எந்த ஒரு நபருக்கும் அந்த உரிமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்படும் உத்தரவுகள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளை நியமிப்பது தொடர்பிலான வரையறுக்கப்பட்ட சில விடயங்களைத் தவிர ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் ஏனைய செயற்பாடுகளுக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மனுவை தாக்கல் செய்யும் உரிமை இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.கனக ஈஸ்வரன்
தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளும் நிறைவேற்றதிகார மற்றும் நிர்வாக செயற்பாடா என நீதியரசர் பிரசன்ன ஜயவர்த்தன வினவிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் அது உண்மை என குறிப்பட்டார்.

உயர் நீதிமன்றத்தினால் மனுக்களை விசாரணை செய்யும் அதிகாரம் இல்லை என அரசியல் அமைப்பில் குறிப்பிடப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

அந்த அதிகாரத்தை நீக்குவதாக இருந்தால் தௌிவாக அதில் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் அவ்வாறு குறிப்பிடப்படாத நிலையில் இந்த மனுக்களை உயர் நீதிமன்றத்தினால் விசாரணை செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு ஏற்ப, அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தின் பிரதானி ஜனாதிபதி என குறிப்பிடப்பட்டுள்ளதாக இதன்போது சட்டத்தரணி கிறிஸ்மால் வர்ணசூரிய தெரிவித்தார்.

நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றத்திற்கு இடையில் காணப்படவேண்டிய சமநிலை இருப்பு இல்லாமற்போகும் நிலைமை காணப்படுவதாக அவர் கூறினார்.

நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் தமது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றாவிட்டால், மக்களின் சர்வஜன வாக்குரிமை என்ற அடிப்படை உரிமை மீறப்படுவதாக சட்டத்தரணி கிறிஸ்மால் வர்ணசூரிய மேலும் தெரிவித்தார்.

எனவே, பாராளுமன்றத்தினால் உருவாக்கப்படும் சட்டங்களுக்கு ஏற்ப மக்களின் சர்வஜன வாக்குரிமை அதிகாரத்தை செயற்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குவது நீதிமன்றத்தின் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயற்பாட்டின் கீழே வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமையால் உயர் நீதிமன்றத்தினால் மனுக்களை விசாரிக்க முடியும் என சட்டத்தரணி திலக் மாரப்பன சுட்டிக்காட்டினார்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்