முதற்தடவையாக 36 அடியை எட்டிய இரணைமடு குளம்

வரலாற்றில் முதற்தடவையாக 36 அடியை எட்டிய இரணைமடு குளம்

by Staff Writer 06-12-2018 | 8:13 PM
Colombo (News 1st) இரணைமடு குளம் வரலாற்றில் முதற்தடவையாக 36 அடியை எட்டியுள்ளது. இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படாத நிலையில், கலிங்கு ஊடாக நீர் வெளியேற ஆரம்பித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ், அச்சுவேலி - தொண்டைமனாறு கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால், வல்லை கிராமத்தை சேர்ந்த 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கிராமம் நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை, தொண்டைமனாறு கடல் நீரேரிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள பாரிய வான் கதவைத் திறந்து விடுமாறு பிரதேச மக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளிடம் கோரினர். இதன்போது, பிரதேச மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது. அணையைத் திறந்து விட்டால் மேலும் வௌ்ளப்பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.