எரிபொருளுக்கான வரி விதிப்பைக் கைவிட்ட பிரான்ஸ்

மக்களின் எதிர்ப்பால் எரிபொருளுக்கான வரி விதிப்பைக் கைவிட்ட பிரான்ஸ்

by Bella Dalima 06-12-2018 | 4:37 PM
எரிபொருளுக்கான வரி விதிப்பை அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து கைவிடுவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. முன்னதாக இதனை 6 மாத காலம் இடைநிறுத்துவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதனை கைவிடுவதாக பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் அறிவித்துள்ளார். எரிபொருளுக்கான வரி விதிப்பை எதிர்த்து கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வந்த போராட்டங்கள் பிரான்ஸின் முக்கிய நகரங்களில் கணிசமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. "மஞ்சள் ஜாக்கெட்" என்று அறியப்படும் இந்த போராட்டங்கள் அரசின் மீதான மக்களின் கோபத்தை வெளிக்காட்டுவதாக அமைந்தன. மேலும், இந்த வார இறுதியில் சில போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போராட்டம் தொடங்கியதில் இருந்து 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து அமலுக்கு வர இருந்த எரிபொருளுக்கான வரி 6 மாத காலத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்படும் என கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. அதிக சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதாக பரப்புரை மேற்கொண்டதால், 2 ஆண்டுகளுக்கு முன்னர் இம்மானுவல் மக்ரோன் பிரான்சின் அதிபராக தெரிவு செய்யப்பட்டார். ஆனால், சமீபத்திய மாதங்களில் அவரது நற்பெயரில் அதிக வீழ்ச்சி காணப்படுகிறது.