அமெரிக்க போர் விமானங்கள் விபத்திற்குள்ளாகின 

இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் விபத்திற்குள்ளாகின: 6 பேரைக் காணவில்லை

by Bella Dalima 06-12-2018 | 4:00 PM
ஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணெய் நிரப்பும் நிலையத்திற்கு சென்று எண்ணெய் நிரப்பிக்கொண்டு புறப்பட்ட அமெரிக்க போர் விமானங்களான FA-18 ஃபைட்டர், KC-130 டேங்கர் ஆகிய இரண்டு விமானங்களும் விபத்திற்குள்ளாகின. ஜப்பான் கடற்கரையில் சுமார் 200 மைல் தொலைவில் அதிகாலை 2 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஜப்பானின் இவாகுனி விமான தளத்தில் இருந்து KC-130 போர் விமானம் 5 பேருடனும், FA-18 விமானம் இரண்டு பேருடனும் ஜப்பான் கடற்கரை பகுதிக்கு எரிபொருள் நிரப்ப சென்றுவிட்டு திரும்பின. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானங்கள் விபத்திற்குள்ளாகின. இதையடுத்து கடலில் நீந்திய ஒரு விமானியை அங்கிருந்த ஜப்பான் கடற்படை வீரர்கள் மீட்டுள்ளனர். மற்ற 6 வீரர்கள் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து ஜப்பான் கடற்படையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது போன்ற விபத்து சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்று என அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், வழக்கமான பயற்சியின் போது இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தகவல் அளித்துள்ளனர். இதேபோல், கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க கடற்படை போர் விமானம் ஒன்று ஜப்பானின் ஒகின்வா பகுதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளான நிலையில், அதிர்ஷ்டவசமாக விமானிகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.