by Bella Dalima 06-12-2018 | 4:15 PM
ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய வெப்பமயமாதல் அதிகரித்துள்ளதால் பனிப்பாறைகள் உருகும் வேகமும் அதிகரித்துள்ளது. இது உலகம் முழுவதும் பருவநிலையில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பனிப்பாறையின் கனமும் குறைந்து வருவதால், எளிதாகவே அவை உடைந்து விடுகின்றன. இதனால், அரியவகை உயிரினமான துருவக் கரடிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உலகின் வெப்பம் அதிகரித்து வருவதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 22 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் வெப்பமான ஆண்டுகளாகப் பதிவாகியுள்ளன. அதில் 2015-2018 வரையிலான ஆண்டுகள் மிக அதிக வெப்பமான ஆண்டுகளாக பதிவாகியுள்ளன. இதேநிலை நீடித்தால் 2100 ஆம் ஆண்டில் 3-5 செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயரக்கூடும் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடல் மட்டம் உயர்வு, பெருங்கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பது, பனிப்பாறைகள் உருகுவது உள்ளிட்டவையே உலக வெப்பமயமாதலுக்கு உதாரணங்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், பருவநிலை மாற்ற விளைவுகளை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய கடைசி தலைமுறையும் நாம் தான் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.