பாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை: சட்ட மா அதிபர்

by Staff Writer 05-12-2018 | 7:41 PM
Colombo (News 1st) பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு எடுத்த தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லையென சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய இன்று தெரிவித்தார். இன்று அந்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதம நீதியரசர் உள்ளிட்ட பல தரப்பினர் கருத்துத் தெரிவித்தனர். பாராளுமன்றத்தைக் கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் பிரதம நீதியசரசர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரச தலைவர் என்ற வகையில் அவருக்கு உள்ள அதிகாரத்திற்கு ஏற்ப ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமையினால் உயர் நீதிமன்றத்தினால் அது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய இன்று சுட்டிக்காட்டினார். மனுதாரர்களுக்கு வர்த்தமானி அறிவித்தலின் சட்டப்பூர்வதன்மையை ஆட்சேபனைக்கு உட்படுத்த எவ்வித சட்ட பின்புலமும் இல்லை என்பதனால், மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் மன்றில் கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி அரச தலைவர் என்பதுடன், அரசியல்வாதி என்ற வகையில் செயற்பட்டு தீர்மானம் எடுத்துள்ள பின்புலத்தில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் இந்த செயற்பாட்டில் தலையிடுவது ஏற்புடையதா என இதன்போது சட்ட மா அதிபர் கேட்டுக்கொண்டார். அடிப்படை உரிமை மனுக்கள் மூலம் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றி, அந்த பிரேரணை ஊடாக ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றத்தை நாட வேண்டிய செயற்பாடே இடம்பெற்றிருக்க வேண்டும் என சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டினார். அந்த செயற்பாட்டில் இருந்து விடுபட்டு ஜனாதிபதியின் செயற்பாடுகளை ஆட்சேபனைக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மனுக்களை முன்வைக்கும் இயலுமை இல்லையென ஜயந்த ஜயசூரிய மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியிருந்தால் அது தொடர்பில் பாராளுமன்றத்தினால் மாத்திரமே நடவடிக்கை எடுக்க முடியும் என சட்ட மா அதிபர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி ஏதாவது உத்தரவை பிறப்பித்திருந்தால், அரசியலமைப்பின் 38 ஆவது சரத்திற்கு அமைய சபாநாயகர் உயர் நீதிமன்றத்திடம் பொருள் கோடியிருக்க வேண்டும் என சட்ட மா அதிபர் குறிப்பிட்டார். அரசியலமைப்பின் குறித்த அனைத்து சரத்துக்களையும் ஆராய்ந்தாலும், ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என இடைநிலை மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன குறிப்பிட்டார். அரசியலமைப்பின் ஆங்கிலம் மற்றும் சிங்கள பிரதிகளில் குழப்பம் காணப்படும் நிலையில், சிங்கள பிரதியின் படியே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என சட்ட மா அதிபர் தெரிவித்தார்.