பஸ் கட்டணங்களைக் குறைப்பது குறித்த பேச்சுவார்த்தை

பஸ் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று

by Staff Writer 05-12-2018 | 7:05 AM
Colombo (News 1st) எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ் கட்டணங்களையும் குறைப்பது தொடர்பிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இன்று (05) காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இடம்பெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் அனைத்து பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த மாதம் முதலாம் திகதி டீசலின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன், கடந்த 15 ஆம் திகதி டீசலின் விலையை மேலும் 5 ரூபாவினால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசல் மற்றும் பெற்றோலின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டது. இந்தநிலைமையின் கீழ் ஒரு மாத காலத்துக்குள் டீசல் விலை இதுவரை 17 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் டீசலின் விலை 14 ரூபாவினால் மாற்றமடைந்தால் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். எனினும், கடந்த மாதம் முதலாம் திகதி ஒரு லீற்றர் டீசலின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறியளவில் பஸ் கட்டணங்களும் குறைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, பஸ் கட்டண குறைப்பு தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, இன்றைய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதேநேரம், பஸ் கட்டணங்களைக் குறைப்பது தொடர்பில் தாம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.