பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2018 | 8:10 pm

Colombo (News 1st) அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி அநேகமான பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

எனினும், சில பகுதிகளில் தொழிலாளர்கள் இன்றும் வழமைபோன்று தொழிலுக்கு சென்றிருந்தனர்.

சம்பள உயர்வை வலியுறுத்தி மாத்தளை பன்சலதென்ன தோட்டத்தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எட்டியந்தோட்டை – அலுகொல்ல மற்றும் வியோனா தோட்ட மக்கள் கொழுந்து மடுவத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

கண்டி – புசல்லாவை சோகம, கலுகொல்ல, ரொத்சைல்ட், சங்குவார், போமன்ட், டேசன், எல்பொடை தோட்டங்களை சேர்ந்த மக்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன், எல்பொடை தோட்டத்தொழிற்சாலை முன்பாக தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புசல்லாவை – சோகம தோட்டத்தில் ஒரு பிரிவு மக்களும் மெல்போட் தோட்ட மக்களும் இன்று தொழிலுக்கு சென்றிருந்தனர்.

ஹங்குரன்கெத்த – ஹேவாஹெட்ட, ஹோப் தோட்டத்தில் 1000 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.

தெல்தோட்டை – கிரேட்வெலி தோட்ட மக்களும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இலங்கையில் முதன்முறையாக தேயிலைச்செடி நாட்டப்பட்ட நூல்கந்துர தோட்டத்திலும் தோட்டத்தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அத்துடன், தோட்ட ஆலயத்தில் சிரமதானப் பணியிலும் ஈடுபட்டனர். வீடுகளில் கறுப்புக் கொடிகளையும் தொங்கவிட்டிருந்தனர்.

ஹட்டன் – டிக்கோயா தோட்ட மக்களும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தெனியாய தோட்ட மக்கள் தோட்டத்தில் உள்ள ஆலயம் முன்பாக இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஏன்பர்ட் தோட்ட மக்கள் பாதுக்க – இங்கிரிய பிரதான வீதியை மறித்து ரைகம தோட்ட சந்தியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீதியில் அமர்ந்து சுமார் 1 மணித்தியாலம் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதேவேளை, அக்கரைப்பத்தனை – ஊட்டுவள்ளி தேயிலைத் தொழிற்சாலையில் நேற்று (04) இடம்பெற்ற அமைதியின்மையை அடுத்து, நேற்று இரவு இனந்தெரியாதோரால் தோட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் வீடுகளுக்கு செல்லும் நீர் விநியோகத் தாங்கியை சேதப்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றும் இங்கு பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்