அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2018 | 4:46 pm

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு கோட்டை நீதவான ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

11 இளைஞர்களைக் கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி ஒருவருக்கு அடைக்கலம் ​கொடுத்தமைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவரை கைது செய்தது. இதனையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தமை தெரியவந்தால் பிணையை இரத்து செய்து, வழக்கு நிறைவுபெறும் வரை விளக்கமறியலில் வைக்க நேரிடும் என நீதவான் இன்று சந்தேகநபரை அறிவுறுத்தியுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவிக்கும் திகதியில் ஆஜராகி விசாரணைகளுக்கு ​தேவையான வாக்குமூலங்களை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முறைப்பாட்டாளர் தரப்பின் முக்கிய சாட்சியாளரான லெப்டினன்ட் கமாண்டர்
லக்சிறி கலகமகே என்பவரை ரவீந்திர குணரத்னவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பில் நீதவான் அதிருப்தி வௌியிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் சந்தேகநபராக பெயரிடுவதற்கு போதியளவு ஆதாரம் இல்லை என தெரிவித்த நீதவான் வேறொரு அதிகாரியின் கீழ் விசாரணைகளை நடத்துமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமான பஸ்ஸில் அழைத்துவரப்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, வழக்கு விசாரணை ஆரம்பமாகும் வரை சுமார் 4 மணித்தியாலமாக பஸ்ஸிற்குள் காத்திருந்தார்.

நீதிமன்ற அனுமதியுடன் அவரை சிறைச்சாலைகள் பஸ்ஸில் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்