இரண்டாகக் கழன்ற யாழ்தேவி ரயில் பெட்டிகள்: விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 04-12-2018 | 6:48 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று (03) பயணித்த யாழ்தேவி ரயிலின் பெட்டிகள் கழன்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று காலை கொழும்பு நோக்கிப்புறப்பட்ட யாழ்தேவி ரயிலின் சில பெட்டிகள் திடீரென கழன்றன. வவுனியா இரட்டைப்பெரியகுளம் உப ரயில் நிலையத்திற்கு அருகில் பகல் 12.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயிலின் எஞ்சினுடன் மூன்று பெட்டிகள் வேறாகவும் நான்காம், ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாம் பெட்டிகள் வேறாகம் பிரிந்துள்ளன. இவ்வாறு இரண்டாகக் கழன்ற பெட்டிகள் சுமார் ஒரு கிலோமீட்டர் வரை பயணித்து மோதின. இந்த சம்பவம் காரணமாக நேற்று பகல் கொழும்பு நோக்கி வந்த யாழ்தேவி ரயில் சேவையில் சுமார் 30 நிமிட தாமதம் ஏற்பட்டுள்ளது. பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக, இந்த ரயிலில் பயணித்த தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். உத்தியோகத்தரின் தலைப்பகுதியில் காயமேற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பபவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இதனால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு இடம்பெற்றிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.