by Staff Writer 03-12-2018 | 3:43 PM
Colombo (Nws 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அந்தப் பதவிகளை வகிப்பதை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 122 பேரால் தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்துடன், வழக்கின் பிரதிவாதிகளை மன்றில் ஆஜராகுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.
அத்துடன், பிரதிவாதிகளை எதிர்வரும் 12 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மனுதாரர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை அமுலில் இருக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பீ. பத்மன் சுரசேன மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலமுள்ள எதிர்க்கட்சியின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிராக 2 சந்தர்ப்பங்களில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை நிறைவேற்றிய நிலையில், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அந்த பதவிகளை வகிக்க முடியும் உள்ளிட்ட விடயங்களை எதிர்வரும் 12 ஆம் திகதி மன்றில் முன்வைக்குமாறு, மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 49 பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.
இரு தரப்பினராலும் மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை நன்கு மதிப்பீடு செய்ததாகவும் சமநிலை கொள்கை அடிப்படையில் பிரதிவாதிகள் அந்த பதவிகளை வகிப்பதனால் அதிகம் பாதிக்கப்படுவது மனுதாரர்கள் தரப்பு என்பதை நீதிமன்றத்தினால் அவதானிக்க முடிவதாகவும் நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.
மனுதாரர்கள் முன்வைத்த விடயம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படலாம் எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் குழாம், இடைக்கால தடையுத்தரவொன்றைப் பிறப்பித்து இருதரப்பினதும் விடயங்களை ஆராய்ந்து இறுதித் தீர்ப்பினை அறிவிப்பது சிறந்தது என்பதனால் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்ததாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோல்வியடைந்தமை மூலம் அவர்களுக்கு அரச நிறுவனங்களில் பதவிகளை வகிப்பது தொடர்பில் நம்பிக்கை இல்லை என்பதே தெளிவாகுவதாக முறைப்பாட்டாளர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சுட்டிக்காடினர்.
பிரதமர் பதவி அல்லது அமைச்சரவையின் செயற்பாடுகளை நிறுத்துவது அன்றி, மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏனைய பிரதிவாதிகள் குறித்த பதவிகளை வகிப்பதை நிறுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குழாம் தெரிவித்தது.
இந்தப் பதவிகளை யார் வகிக்க வேண்டும் என்பது நீதிமன்றம் எடுக்க வேண்டிய தீர்மானம் அல்லவென சுட்டிக்காட்டிய நீதிபதிகள் குழாம், அதனை அரசியலமைப்பின்படி அதிகாரம் உள்ளவர்களே தீர்மானிக்க வேண்டும் என அறிவித்தது.