மனுக்களை மீளப்பெறுமாறு ரணிலுக்கு அதாவுல்லா கடிதம்

மனுக்களை மீளப்பெறுமாறு ரணிலுக்கு அதாவுல்லா கடிதம்

மனுக்களை மீளப்பெறுமாறு ரணிலுக்கு அதாவுல்லா கடிதம்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2018 | 9:01 pm

Colombo (Nws 1st) உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுக்களை மீளப்பெறுமாறு கோரி, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

தாய்நாட்டின் இன்றைய அசாதாரண சூழ்நிலையை சீர்செய்வோம் என்ற தலைப்பில் இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஒருநாளும் ஜனாதிபதியாக வரமுடியாது என கருதியதால் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்தின் ஊடாக பிரதமரின் அதிகாரங்களைக் கூட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக ஏ.எல்.எம். அதாவுல்லா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கான திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோதெல்லாம், அது அரசியலமைப்பை சிதைப்பது போன்று அமைந்திருந்ததாகவும் அதிஷ்டவசமாக, அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனவும் அவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 44 ஆசனங்களை மாத்திரம் கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதை நினைவுகூர்ந்துள்ள அதாவுல்லா, அந்தப் பதவி அவரை சார்ந்த குழுக்களின் தேவைகள் சிலவற்றை பூர்த்திசெய்வதற்கே உதவியதாக கூறியுள்ளார்.

இந்தப் பதவியேற்பே குறைந்த எண்ணிக்கையினரை வைத்திருப்பவரும் பிரதமராகலாம் என்ற சம்பிரதாயத்தை இன்று பாராளுமன்றத்தில் தோற்றுவித்துள்ளதாக அவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திருத்தத்திற்கு பாராளுமன்றத்தின் 223 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததாகவும் தேசியக் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு இந்த அதிகாரம் கிடைப்பதற்கு பிரதான கர்த்தாவாகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினரும் அன்று அந்த சட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் முண்டியடித்து வாக்களித்த சில கட்சிகளும் தற்போது அந்த அதிகாரத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளமை வேடிக்கை தருவதாக அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

பாராளுமன்றத்தை வேடிக்கைக் களமாக மாற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவை ஊதுகுழலாக பயன்படுத்தியதாக மக்கள் கூறுவதாகவும் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்