பொலிஸ் உத்தியோகத்தர்களின் பூதவுடல்கள் நல்லடக்கம்

துப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸ் உத்தியோகத்தர்களின் பூதவுடல்கள் நல்லடக்கம்

by Staff Writer 02-12-2018 | 4:54 PM
Colombo (News1st) மட்டக்களப்பு - வவுணதீவில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரினதும் இறுதிக் கிரியைகள் இன்று (02) நடைபெற்றன. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த காலி - உடுகம பகுதியைச் சேர்ந்த நிரோஷன் இந்திக்க பிரசன்னவின் இல்லத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சென்றிருந்தார். ஒரு பிள்ளையின் தந்தையான 35 வயதுடைய நிரோஷன் இந்திக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார். அதேநேரம், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்றிரவு அங்கு சென்றதுடன், அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் பூதவுடல் உடுகமவிலுள்ள குடும்ப மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மற்றைய பொலிஸ் உத்தியோகத்தரான கணேஷ் தினேஷின் இறுதிக் கிரியை பெரியநீலாவணையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கபில ஜயசேகர ஆகியோர் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம். ஹரீஸ் உள்ளிட்ட பலரும் அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதியின் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டதை அடுத்து, அன்னாரின் பூதவுடல் பொலிஸ் அணிவகுப்புடன் மயானத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.