ஐக்கிய தேசிய முன்னணியின் நீதிக்கான யாத்திரை ஆரம்பம்: நாளை மஹியங்கனை பயணம்

by Staff Writer 01-12-2018 | 7:23 PM
Colombo (News 1st) மக்கள் உரிமையை பாதுகாக்குமாறு கோரி ஐக்கிய தேசிய முன்னணி ஏற்பாடு செய்துள்ள வாகனப் பேரணி கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக இன்று ஆரம்பமானது. இந்த பேரணிக்கு நீதிக்கான யாத்திரை என பெயரிடப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபைக்கு முன்பாகவிருந்து சமய வழிபாடுகளின் பின்னர் வாகனப் பேரணி ஆரம்பமாகியது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். நீதிக்கான யாத்திரை வாகனப் பேரணி சுதந்திர சதுக்கத்தினூடாக பம்பலப்பிட்டி, வௌ்ளவத்தை, தெஹிவளை வழியாக மொரட்டுவையை சென்றடைந்தது. இதன் பின்னர் பாணந்துறையைக் கடந்து இந்த வாகனப் பேரணி களுத்துறை நகரை சென்றடைந்ததுடன், பேரணியில் கலந்து கொண்டவர்கள் அங்கு மதவழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன் பின்னர் களுத்துறை நகரில் மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதனையடுத்து, நீதிக்கான யாத்திரை பேரணி பேருவளை - அளுத்கம நகரூடாக அம்பலாங்கொடை நகருக்கு சென்றபோது, அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. மக்கள் உரிமையை பாதுகாக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான யாத்திரை பயணம் இன்று பிற்பகல் சீனிகம தேவாலயத்தினை சென்றடைந்தது. காலி நகரூடாக தேவிநுவர விஷ்ணு தேவாலயத்தினை சென்றடைந்ததையடுத்து இன்றைய பயணம் நிறைவுற்றது. இந்த வாகனப் பேரணி நாளைய தினம் கதிர்காமத்தினூடாக மஹியங்கனைக்கு செல்லவுள்ளது.