பேருவளையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மேலும் ஒருவர் கைது

பேருவளையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மேலும் ஒருவர் கைது

பேருவளையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மேலும் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2018 | 5:40 pm

Colombo (News 1st) பேருவளையில் 2778 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மற்றுமொருவர் யட்டியந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் வைக்கப்பட்ட படகின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபரை கைது செய்ய சென்ற போது, அவர் களனி ஆற்றில் குதித்ததாக பொலிஸார் கூறினர்.

எவ்வாறாயினும், பொலிஸாரால் சந்தேகநபர் காப்பாற்றப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை – மொரகல்ல பகுதியை சேர்ந்த 44 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 15 இலட்சம் ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யட்டியந்தோட்டை நகரிலுள்ள வங்கி ஒன்றில் சந்தேகநபர் தனது தனிப்பட்ட கணக்கிலிருந்து இந்த பணத்தை மீளப்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பேருவளை – பலப்பிட்டிய கடற்கரையில் 231 கிலோகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 2778 மில்லியன் ரூபா பெறுமதியானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பயனாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீனி கொண்டு செல்லும் போர்வையில் 14 மூடைகளில் பொதியிடப்பட்டு படகொன்றில் ஹெரோயின் கடத்தப்பட்டுள்ளது.

குறித்த படகை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹெரோயின் பொதிகளில் பாகிஸ்தான் நாட்டு பொதியிடல் குறியீடுகள் காணப்படுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.