நான்காவது நாளாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

நான்காவது நாளாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2018 | 8:36 pm

Colombo (News 1st) நாளொன்றுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நான்காவது நாளாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

சம்பள உயர்வு கோரி தோட்டத்தொழிலாளர்கள் இன்றைய தினமும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அக்கரப்பத்தனை – பெரிய நாகவத்தை தோட்டத்திலுள்ள மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரிய நாகவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, பண்டாரவளை – கிரேக் தோட்ட மக்கள், பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும், தமக்கான சம்பள அதிகரிப்பு விரைவில் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் கோரி விசேட பூஜைகளில் ஈடுபட்டனர்.
கிரேக் தோட்டத்திலுள்ள ஸ்ரீ சுப்பிரமணியம் ஆலயத்தில் பூஜைகள் இடம்பெற்றன. பூஜைகளைத் தொடர்ந்து கிரேக் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பூண்டுலோயா – சீன் தோட்டத்தின் நான்கு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இன்று கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மக்கள் கடந்த மூன்று நாட்களாகத் தொழிலுக்குச் செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கேகாலை மாவட்டத்திலும் பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தெஹிஓவிட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாஓய, பட்டங்கல, கிளாசல், சப்புமல்கந்த, மாயகந்த, தேவாலகந்த, தெனிஸ்வத்த ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்கள், கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியை மறித்து தெஹிஓவிட்ட நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார்.

தெஹிஓவிட்ட – ஐலா மற்றும் எவிங்டன் தோட்டங்களைச் சேர்ந்த மக்களும் கொட்டகலை – டொனிகிளிப் தோட்ட மக்களும் தெனியாய – என்சல்வத்த பெரிய தோட்ட மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வூட்லேன்ட் பகுதியில், ஸ்ட்ரதன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டி – கெலாபொக்க -​D மலை தோட்ட மக்கள் 1000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை கோரி இன்று எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர். தோட்ட மாரியம்மன் கோவிலில் ஆரம்பித்த பேரணி, வத்தேகம – கபரகல பிரதான வீதியூடாக பயணித்தது.