ஆண்டின் அதிசிறந்த மெய்வல்லுநர் வீரராக எலியுட் கிப்ஜோச், வீராங்கனையாக கேத்தரின் இபேர்குவன் தெரிவு

ஆண்டின் அதிசிறந்த மெய்வல்லுநர் வீரராக எலியுட் கிப்ஜோச், வீராங்கனையாக கேத்தரின் இபேர்குவன் தெரிவு

ஆண்டின் அதிசிறந்த மெய்வல்லுநர் வீரராக எலியுட் கிப்ஜோச், வீராங்கனையாக கேத்தரின் இபேர்குவன் தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

05 Dec, 2018 | 4:37 pm

Colombo (News 1st) கென்யாவின் ஒலிம்பிக் சம்பியனான எலியுட் கிப்ஜோச் (Eliud Kipchoge) ஆண்டின் அதிசிறந்த மெய்வல்லுநர் வீரர் விருதை சுவீகரித்துள்ளார்.

2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் எலியுட் கிப்ஜோச் ஆடவர் மரதனோட்டத்தில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்த வீரராவார்.

இவ்வருடத்திற்கான உலகப்புகழ்பெற்ற பேர்லின் மற்றும் லண்டன் மரதனோட்டங்களில் எலியுட் கிப்ஜோச் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தமையும் சிறப்பம்சமாகும்.

இதேவேளை, ஆண்டின் அதிசிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை கொலம்பியாவின் முப்பாய்ச்சல் வீராங்கனையான கேத்தரின் இபேர்குவன் (Caterine Ibarguen) வெற்றிகொண்டார்.

2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் மகளிர் முப்பாய்ச்சல் போட்டியில் கேத்தரின் இபேர்குவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளதோடு , இவ்வருடத்திற்கான டயமன்ட் லீக் மெய்வல்லுநர் போட்டிகளில் அவர் 6 தங்கப்பதக்கங்களை வெற்றிகொண்டுள்ளார்.

வருடம் முழுவதும் சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் வருடாந்த விருது வழங்கல் விழா மொனோக்கோவில் நடைபெற்றது.

இவ்விழாவில் இவ்வருடத்திற்கான சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய சுவீடனின் அர்மன்ட் டுப்ளன்டிஸ் (Armand Duplantis) வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றார்.

ஐரோப்பிய சம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டிகளில் 20 மற்றும் 18 வயதிற்குட்பட்ட போட்டிகளில் ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் அர்மன்ட் டுப்ளன்டிஸ் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் சிட்னி மெக்லாக்ளின் (Sydney McLaughlin) வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதை வெற்றி கொண்டார்.

சிட்னி மெக்லாக்ளின் 60 மீட்டர் தடைதாண்டல் 100 , 200 மற்றும் 400 மீட்டர் மகளிர் ஓட்டப்போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீராங்கனையாவார்.