மாற்றுத்திறனாளிகளுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை சாம்பியனானது

by Staff Writer 30-11-2018 | 9:26 PM
Colombo (News 1st) முதற்தடவையாக நடத்தப்பட்ட கட்புலன், செவிப்புலனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை சாம்பியனானது. இறுதிப் போட்டியில் இந்திய அணி 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. கட்புலன், செவிப்புலனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, நேபாளம், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 8 அணிகள் பங்கேற்றன. போட்டித்தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை லீக் சுற்றில் நோபாளம், தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டி இன்று நடைபெற்றதுடன், இதில் இலங்கையும் இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய இந்திய அணி 15.2 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. அதற்கமைய கட்புலன், செவிப்புலனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை உலக சாம்பியன் பட்டத்தை சூடியது. இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் தொடரின் சிறந்த வீரர் ஆகிய விருதுகளை இலங்கையின் கமிந்து மெல்கம் வென்றார். இந்தப் போட்டித் தொடரில் அதிசிறந்த பந்துவீச்சாளர் விருது இலங்கையின் அசங்க மஞ்சுள வசமானது. ஜயலத் அபொன்ஸூ, உஷாந்த குணரத்ன ஆகியோர் இலங்கை செவிப்புலன் குறைபாடுடைய அணியின் பயிற்றுநர்களாக செயற்பட்டனர். 1996 உலகக் கிண்ணம், 2014 இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் ஆகியவற்றுக்கு பின்னர் இலங்கை சுவீகரித்த முதல் உலக சாம்பியன் பட்டம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.