தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க இரகசிய உடன்படிக்கை தேவையா: சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி

by Staff Writer 30-11-2018 | 8:10 PM
Colombo (News 1st) தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரகசிய உடன்படிக்கை தேவையா என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரகசிய உடன்படிக்கை தேவைதானா. அவ்வாறு இருந்தால் அவ்வாறான இரகசிய உடன்பாடுகள் எதிர்காலத்தில் எவ்வித பிரயோசனங்களையும் கொடுக்கமாட்டாது. ஏன் என்றால் நீங்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக இருந்தால், ஜனாதிபதியையும் இணைத்து தான் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். இராணுவத்தினரை அகற்ற வேண்டுமாக இருந்தால் அதற்கு ஜனாதிபதியின் ஒத்துழைப்பு தேவையாக இருக்கும். இல்லையேல், மீள்குடியேற்றம் செய்வதாக இருந்தால் அதற்கும் ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு தேவையாக இருக்கும். அவற்றை இரகசியமாக பேசி பிரதமராக வந்தவுடன் செயற்படுத்த முடியும் என்பது அல்ல. ஆகவே, தமிழ் மக்களின் உரிமைகள், நலன்கள் பற்றி பேசுவதாக இருந்தால் அது இரகசியமான பேச்சுவாரத்தையாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது.
என சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.