கடந்த 4 ஆண்டுகள் தான் உலகின் வெப்பமான ஆண்டுகள்

கடந்த 4 ஆண்டுகள் தான் உலகின் வெப்பமான ஆண்டுகள்: உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவிப்பு

by Bella Dalima 30-11-2018 | 4:49 PM
Colombo (News 1st) தொடர்ந்து நான்காவது ஆண்டாக இம்முறையும் (2018 ஆம் ஆண்டு) உலகின் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியிருப்பதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது . தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் (1850-1900) இருந்த அளவை விட இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் உலகின் சராசரி வெப்பநிலையானது கிட்டத்தட்ட ஒரு செல்சியஸ் அதிகரித்துள்ளது. கடந்த 22 ஆண்டுகளில் உலகின் 20 வெப்பமான ஆண்டுகள் பதிவாகியுள்ளன. அதில் 2015-2018 வரையிலான ஆண்டுகள் மிக அதிக வெப்பமான ஆண்டுகளாகப் பதிவாகியுள்ளன. இந்த நிலை நீடித்தால் 2100-இல் 3-5 செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2018-இல் வெப்பநிலையானது 0.98 செல்சியஸ் அளவுக்கு உயர்ந்திருப்பது 5 தனித்தனி உலகத் தரவுகளில் இருந்து தெரிய வருகிறது. முந்தைய ஆண்டுகளை விட 2018-இல் சற்றே வெப்பம் அதிகரிக்கும் வீதம் குறைந்ததற்கு லா-நினா காரணி உதவியது. இந்நிலையில், ஒரு வலுவற்ற எல்-நினோ அடுத்த ஆண்டு துவக்கத்தில் (2019) உருவாகலாம். இதனால் அடுத்த வருடம் இவ்வருடத்தை விட வெப்பமான ஒன்றாக அமையக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், நீண்ட காலமாக உள்ள வெப்பம் உயரும் போக்கு 2018-இலும் தொடர்ந்துள்ளது. கடல் மட்ட உயர்வு, பெருங்கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பது , பனிப்பாறைகள் உருகுவது உள்ளிட்டவை இதற்கு சில உதாரணங்கள்.