மே.இ.தீவுகளுக்கு பயிற்றுநராக விரும்பும் சந்திக்க

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநர் பதவிக்கு சந்திக்க ஹத்துருசிங்க விண்ணப்பம்

by Staff Writer 29-11-2018 | 9:05 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநரான சந்திக்க ஹத்துருசிங்க மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக Cricket Age இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநரான சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி இதுவரை குறிப்பிடத்தக்க பலனை பெறாத நிலையில், இது தொடர்பாக கடந்த சில நாட்களாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இலங்கை அணியின் பெறுபேறுகள் மற்றும் தகவல்களை கடந்த சில நாட்களாக நியூஸ்ஃபெஸ்ட் வௌியிட்டிருந்தது. Cricket Age இணையத்தள செய்தியின் பிரகாரம் சந்திக்க ஹத்துருசிங்க மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தால், அவருக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் தன்மை குறித்து கேள்வி எழுகின்றது. ஏதேனுமொரு வகையில் தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்துடன் இணைந்து தம்மால் செயற்பட முடியாது எனத் தெரிவித்து சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியை விட்டு விலகிச் சென்றால் ஒப்பந்த பிரகாரம் நட்டஈடு கோர வாய்ப்புள்ளது. எனினும், இந்த செய்தி உறுதி செய்யப்பட்ட பின்னர் அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்க முடியாது. குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து தகவல்களை வெளியிட வேண்டிய பொறுப்பு அவருடனான ஒப்பந்தத்தின் விடயங்களை அறிந்த இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கே உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பிரதம பயிற்றுநர் பொறுப்புக்கு சந்திக்க ஹத்துருசிங்க விண்ணப்பித்திருந்தால், அது தொடர்பான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நடவடிக்கை என்ன? இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கணக்காய்வுக்கு உட்படும் நிறுவனம் என்பதால், இலங்கை கிரிக்கெட்டின் பிரதம பயிற்றுநருக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பொறுப்புகளில் இருந்து இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் விலகியிருக்க முடியுமா?