பிரதமரின் நிதியை இரத்து செய்ய எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இல்லை: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவிப்பு

by Staff Writer 29-11-2018 | 8:42 PM
Colombo (News 1st) அரச நிதியை பிரதமரின் செயலாளர் பயன்படுத்தும் அதிகாரத்தை இரத்து செய்யும் பிரேரணை 123 வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பிரதமரின் செயலாளர் அரச நிதியைப் பயன்படுத்துவதை இரத்து செய்யும் வகையிலான பிரேரணையொன்றை முன்வைக்க முடியாது என சபை முதல்வர் தினேஸ் குணவர்தன பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். அரசியலமைப்பின் 152 ஆம் சரத்திற்கிணங்க, அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே பாராளுமன்றத்தில் இவ்வாறான பிரேரணையொன்றைக் கொண்டுவர முடியும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, கட்சித் தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சபை அமர்விலும் கலந்து கொள்ளவில்லை. எனினும், அவர்கள் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அவர்களின் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சட்டவிரோதமாக பாராளுமன்றத்தை நடத்துவதாகவும் சபாநாயகர் சட்டத்தை மதிக்காததால் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமல் இருக்கத் தீர்மானித்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். எனினும், தினேஷ் குணவர்தனவின் கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய விடயங்களைத் தௌிவுபடுத்தினார். நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் விடயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்துள்ள பிரேரணை தடையாக அமையாது என சபாநாயகர் தெரிவித்தார். இதேவேளை, பாராளுமன்ற அமர்வைப் புறக்கணித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்புக்களை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது,
தமக்கு வழங்கப்படாத அதிகாரங்களைக் கையில் எடுத்து, சிறிகொத்த கூட்டம் போல பாராளுமன்றத்தை நடத்துவதற்கு முற்சிக்கின்றமை மிகத்தௌிவாகப் புலப்படுகின்றது. இது சட்டவிரோத பிரேரணையாகும். நிலையியற் கட்டளைக்கும் அரசியலமைப்பிற்கும் முரணான சட்டமூலம் இது. இதன் காரணமாகவே இந்த பிரேரணை குறித்த விவாதத்தில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.
என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.