சீனாவிற்கு 4 நிபந்தனைகளை விதித்துள்ளது அமெரிக்கா

நிலையான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட சீனாவிற்கு 4 நிபந்தனைகளை விதித்துள்ளது வௌ்ளை மாளிகை

by Bella Dalima 29-11-2018 | 3:49 PM
அமெரிக்கா-சீனா இடையே நிலையான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட சீனாவிற்கு 4 நிபந்தனைகளை வெள்ளை மாளிகை விதித்துள்ளது. அர்ஜென்டினாவில் நடைபெற உள்ள G20 உச்சி மாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசவுள்ள நிலையில், அமெரிக்கா இந்த நிபந்தனைகளை விதித்துள்ளது. அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை G20 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கும் 20 நாடுகள் பங்கேற்கவுள்ளன. இந்த மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசவுள்ளார். ஏற்கெனவே, இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான வணிகப்போர் நிலவி வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதிப் பொருட்கள் மீதான வரியைப் போட்டிபோட்டு உயர்த்தி வருகின்றன. இது, அந்த இரு நாடுகளை மட்டும் பாதிக்காமல், உலகப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இரு நாட்டுத் தலைவர்கள் இடையேயான இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மோதல்கள் குறித்தும், அதற்கு முடிவு காண்பது குறித்தும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு குறித்து அதிபர் ட்ரம்பின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் லேரி குட்லோ தெரிவித்ததாவது,
அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலையான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு, சீனா சில நிபந்தனைகளை ஏற்க வேண்டும். முதலாவதாக, அறிவுசார் சொத்து காப்புரிமை திருட்டு தொடர்பான பிரச்சினைகளை சீனா தீர்க்க வேண்டும். மேலும், கட்டாயத்தின் பேரில் தொழில்நுட்பங்கள் பரிமாறிக்கொள்ளப்படுவது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இவற்றைத்தொடர்ந்து, வரி விதிப்பு தொடர்பான பிரச்சினைகளும், குறிப்பிட்ட பொருட்களின் உரிமையாளர் தொடர்பான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். இவற்றை சீன அதிபர் ஜின்பிங்கிடம் டிரம்ப் வலியுறுத்தவுள்ளார். இவற்றுக்கு சீனா ஒத்துழைத்தால், இரு நாடுகளுக்கிடையே நிலையான வணிக ஒப்பந்தத்தை ஏற்படுத்த ட்ரம்ப் தயாராக இருக்கிறார்.
என லேரி குட்லோ தெரிவித்தார்.