குற்றச்செயல், பாதாள உலகக் கோஷ்டிக்கு எதிராக சட்டம்

குற்றச்செயல், பாதாள உலகக் கோஷ்டிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 28-11-2018 | 8:11 AM
Colombo (News 1st) குற்றச்செயல்கள், பாதாள உலகக்கோஷ்டி, போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுக்காக கடும் சட்டங்களுடன் கூடிய துரித திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு, குற்றச்செயல்களை குறைத்தல், வாகன விபத்துக்களை மட்டுப்படுத்துதல் தொடர்பான சட்டமூலங்களை திருத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சட்டமூலங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள், பாதுகாப்பு உயரதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான சட்ட திருத்தங்களை துரிதப்படுத்துமாறு இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள் சுற்றிவளைப்பு தொடர்பில் பெலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும்போது சட்டத் தடைகளை நீக்கி அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின்போது அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார். போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்கான அபராதத்தை திருத்துவது தொடர்பிலம் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் சிறைச்சாலைகள் துறையில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.