ஆளும் கட்சி நாளையும் அமர்வைப் புறக்கணிக்கிறது

ஆளும் கட்சி நாளையும் பாராளுமன்ற அமர்வைப் புறக்கணிக்கும் சாத்தியம்

by Staff Writer 28-11-2018 | 10:27 PM
Colombo (News 1st) பாராளுமன்றம் நாளை (29) காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. நாளை காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், நாளைய தினமும் பாராளுமன்றத்தைப் புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து பாராளுமன்றத்தில் நடத்தும் கூட்டத்தையே தாம் புறக்கணிப்பதாகவும் சட்டப்பூர்வமாக இடம்பெறும் பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிப்பதில்லை எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட உறுப்பினர்கள் கடந்த 19 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளித்த, ''பிரதமரின் செயலாளருக்கு அரசாங்கத்தின் பணத்தைப் பயன்படுத்த எவ்வித அதிகாரமும் இல்லை'' என்ற பிரேரணை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சபாநாயர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.