அரச ஊழியர்களின் சம்பள மீளாய்வு அறிக்கை கையளிப்பு

அரச ஊழியர்களின் சம்பள மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Staff Writer 28-11-2018 | 4:07 PM
Colombo (News 1st) அரச ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீளாய்வு அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் எஸ். ரனுக்கேவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், இதன்போது ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் தற்போது அமுலிலுள்ள சுற்றுநிரூபம், கட்டளைகள் என்பன தொடர்பில் ஆராய்ந்து, அவர்களுக்கான சம்பளம் குறித்து பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை நிவர்த்திப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கூடிய அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. எஸ். ரனுக்கே தலைவராகவும் எச்.ஜீ. சுமனசிங்க செயலாளராகவும் செயற்படும் இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.