by Staff Writer 28-11-2018 | 11:18 AM
Colombo (News 1st) மாணவர்களுக்கு இதுவரை அடுத்த வருடத்துக்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதனால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம். எம். ரத்நாயக்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, தாம் இது தொடர்பில் கல்வி வௌியீட்டுத் திணைக்களத்திடம் வினவியதாக தெரிவித்தார்.
அதேநேரம், நூற்றுக்கு 80 வீதமான பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன எனவும் இதன்போது எம். எம். ரத்நாயக்க கூறியதாக, கல்வி வௌியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பப்பட்ட பாடப்புத்தகங்களை மீள வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அவை கிடைத்தவுடன் பாடசாலைகளுக்கு விநியோகிப்பதாக கல்வி வௌியீட்டுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம். எம். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.