மஹிந்தவின் கடிதம் தொடர்பில் பாராளுமன்றில் கேள்வி

சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ எழுதிய கடிதம் தொடர்பில் பாராளுமன்றில் கேள்வி

by Bella Dalima 27-11-2018 | 7:55 PM
Colombo (News 1st) மஹிந்த ராஜபக்ஸ நிதி அமைச்சர் என்ற வகையில் வெளியிட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கடிதத் தலைப்புடன், சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ உத்தரவொன்றை விடுத்துள்ளார்.
BA - DCASE-128-201 எனும் வழக்கு இலக்கத்தின் விண்ணப்பதாரரின் பெயர் அலி ரிஷாட் மோப். சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழ் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய நான், அரசுடைமையாக்கப்பட்டுள்ள 53,455 அமெரிக்க டொலரை மீளக்கையளிக்குமாறு உத்தரவிடுகிறேன்.
என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதம் சட்டப்பூர்வமானதா என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் கேள்வி எழுப்பினார். அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக நாட்டிலிருந்து கொண்டு செல்வதற்கு முற்பட்ட நபரொருவரை விடுவிக்குமாறு மஹிந்த ராஜபக்ஸ சுங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலை நிராகரிப்பதாக, நிதி அமைச்சு அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது. கட்டுநாயக்கவில் சுங்கத்தினால் கைப்பற்றப்பட்ட இந்தப் பணம், உமா ஓய அபிவிருத்தித் திட்டத்தில் பணிபுரியும் ஈரான் பிரஜையின் சம்பளப்பணம் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையில் வங்கி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமையைக் கருத்திற்கொண்டு இந்தப் பணத்தை விடுவிக்குமாறு இலங்கையிலுள்ள ஈரான் தூதரகம், 2018 ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நிதி அமைச்சிடம் கோரியுள்ளது. சுங்க கட்டளைச் சட்டத்தின் 164ஆம் சரத்திற்கு அமைய, நிதி அமைச்சருக்குள்ள அதிகாரங்களுக்கேற்ப, தூதுவரூடாக விடுக்கப்பட்ட கோரிக்கையைக் கருத்திற்கொண்டு, அந்தப் பணத்தை மீள வழங்குமாறு மஹிந்த ராஜபக்ஸ சுங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.