எரிபொருள் ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு

எரிபொருள் கொண்டு செல்லும் ரயில் சாரதிகள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 27-11-2018 | 4:37 PM
Colombo (News 1st) எரிபொருள் கொண்டு செல்லும் ரயில் சாரதிகள் தொடர்ந்தும் சேவையில் இருந்து விலகியுள்ளனர். எரிபொருள் கொண்டு செல்லும் ரயில்கள் மீது சில தரப்பினர் தாக்குதல் மேற்கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் நேற்று (26) காலையில் இருந்து சேவையில் இருந்து விலகியுள்ளனர். தமது கோரிக்கை தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தும் வரையில் பணிப்பகிஷ்கரிப்பை தொடரவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார். இது தொடர்பில் ரயில்வே திணைக்களத்திடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. ரயில்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்தார். ரயில் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரிடம் உதவி கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, எரிபொருள் கொண்டு செல்லும் ரயில் மீதான தாக்குதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் புதுக்கடை இலக்கம் 2 நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, ரயில் பாதுகாப்பு தொடர்பில் 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபடுவதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ மற்றும் ஒருகொடவத்தைக்கு இடையில் பயணித்துக்கொண்டிருந்த ரயில் எஞ்சினை நிறுத்தி பிரதேச மக்களினால் சாரதி மற்றும் உதவியாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்