சுங்கத்திற்கு அழுத்தம்: நிராகரிக்கும் அமைச்சு

இலங்கை சுங்கத்திற்கு அழுத்தம் விடுத்ததான தகவலை நிராகரிக்கும் அமைச்சு

by Staff Writer 27-11-2018 | 2:23 PM
சட்டவிரோதமாக டொலர்களை நாட்டிலிருந்து வௌிநாட்டுக்குக் கொண்டுசெல்வதற்கு முயற்சித்த ஒருவரை விடுவிப்பதற்கு நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ, இலங்கை சுங்கத்திற்கு அழுத்தம் விடுத்ததாக கூறப்படும் தகவலை நிராகரிப்பதாக நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வௌியாகும் தகவல்கள் தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்ற ஈரானியர் ஒருவரிடமிருந்து 53,455 அமெரிக்க டொலர், இலங்கை சுங்க அதிகாரிகளால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்டது. ஈரானிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் செயற்படுத்தப்படும் உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்தில் சேவையாற்றும் ஈரானைச் சேர்ந்த ஒருவர் தனது மாதாந்த சம்பளத்தை வீட்டுக்கு கொண்டுசெல்ல முயற்சித்த வேளையிலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத்தினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் வங்கியூடாக நிதி கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறாமையினால் இந்த ஊழியர்களின் பணத்தை மீண்டும் அந்நாட்டுக்கு அனுப்புவதற்கு அதனை விடுவிக்குமாறு கடந்த ஒக்டோபர் 3 ஆம் திகதி இலங்கைக்கான ஈரான் தூதுவர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 164 ஆவது சரத்தின்படி, நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு ஏற்ப தூதரகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் ஆராய்ந்து, 53,455 டொலரை குறித்த நபருக்கு மீண்டும் வழங்குமாறு, நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ இலங்கை சுங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பணியாற்றும் ஈரான் பிரஜைகள், ஈரானுக்கு பணம் கொண்டுசென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல எனவும் இதற்கு முன்பும் வௌிநாட்டு நாணயங்கள் ஈரானுக்கு கொண்டுசெல்ல முயற்சித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவ்வாறு கொண்டுசெல்ல முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டபோது அவ்வேளையில் நிதியமைச்சராக இருந்தவரின் உத்தரவின்படி அந்த பணம் விடுவிக்கப்பட்டதாகவும் நிதி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.