ஆண்டின் அதிசிறந்த றக்பி வீரர் ஜொன்னி செக்ஸ்டன்

ஆண்டின் அதிசிறந்த றக்பி வீரராக ஜொன்னி செக்ஸ்டன் தெரிவு

by Staff Writer 27-11-2018 | 1:32 PM
ஆண்டின் அதிசிறந்த றக்பி வீரருக்கான விருதை, அயர்லாந்தின் ஜொன்னி செக்ஸ்டன் (Johnny Sexton) சுவீகரித்தார். 2001ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிசிறந்த றக்பி வீரர் விருதை வென்ற முதல் அயர்லாந்து வீரராகவும் ஜொன்னி செக்ஸ்டன் பதிவாகினார். சர்வதேச றக்பி சம்மேளனத்தின் வருடாந்த விருது வழங்கல் விழா மொனோக்கோவில் நடைபெற்றது. றக்பி போட்டிகளில் ஆற்றல்களை வெளிப்படுத்துகின்ற வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களை கௌரவிப்பதற்காக சர்வதேச றக்பி சம்மேளனம் இந்த விருது வழங்கல் விழாவை வருடாந்தம் நடத்துகிறது. அதிசிறந்த றக்பி வீரருக்கான விருதுக்காக தென்னாபிரிக்காவின் மெல்கம் மாக்ஸ் மற்றும் பெப் டி க்ளக் அயர்லாந்தின் கெய்த் வூட் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், இவ்வருட விருதுப் பட்டியலில் நியூஸிலாந்தின் எந்தவொரு வீரரும் இடம்பெற்றிருக்கவில்லை என்பது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இதனையடுத்து, அதிசிறந்த றக்பி வீரராக அயர்லாந்தின் ஜொன்னி செக்ஸ்டன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அயர்லாந்து தேசிய றக்பி அணியின் ஜோ ஷமீட் அதிசிறந்த பயிற்றுவிப்பாளருக்கான விருதை சுவீகரித்தார். நியூஸிலாந்து மகளிர் அணியின் ஜெசி ட்ரெமியூலியா அதிசிறந்த வீராங்கனைக்கான விருதைத் தன்வசப்படுத்தினார். அதேநேரம், ஆண்டின் அதிசிறந்த றக்பி அணிக்கு பரிசளிக்கப்படும் விருதையும் அயர்லாந்து றக்பி அணி சுவீகரித்தது.