செவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் ரோபோ விண்கலம் நாசாவிற்கு புகைப்படம் அனுப்பியது

செவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் ரோபோ விண்கலம் நாசாவிற்கு புகைப்படம் அனுப்பியது

செவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் ரோபோ விண்கலம் நாசாவிற்கு புகைப்படம் அனுப்பியது

எழுத்தாளர் Bella Dalima

27 Nov, 2018 | 4:06 pm

Colombo (News 1st) நாசா விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட், 7 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே தான் எடுத்த புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, செவ்வாயின் உட்பகுதிகளை ஆழமாக ஆய்வு செய்வதற்காக முதல் ரோபோ விண்கலம் இன்சைட், கடந்த மே மாதம் 5 ஆம் திகதி கலிபோர்னியாவிலுள்ள வாண்டென்பெர்ஜ் விமானப்படைத் தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

7 மாதங்கள் பயணத்திற்கு பின்னர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ரோபோ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மத்திய ரேகை பகுதிக்கு அருகே உள்ள அலிசிம் பிளானீசியா என்ற பகுதியில் தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே தான் எடுத்த புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பியுள்ளது.

இதைக் கொண்டாடும் விதமாக கலிஃபோர்னியாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தில் உள்ள நாசாவின் கட்டுப்பாட்டு மையக்குழுவினர் கரகோஷம் எழுப்பியும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டும் கைகளை குலுக்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது குறித்து நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி ஜிம் ப்ரைடென்ஸ்டீன், ‘‘மனித வரலாற்றில் எட்டாவது முறையாக இன்று செவ்வாய் கிரகத்தில் இன்சைட்-ஐ வெற்றிகரமாக நாங்கள் தரையிறக்கியுள்ளோம். இந்த சாதனை அமெரிக்காவிற்கும் நமது சர்வதேச பங்காளர்களின் புத்திசாலித்தனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் நாசாவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி,” என கூறினார்.

செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், தரையில் துளையிட்டு உட்புற வெப்பப் பரிமாற்றங்கள் போன்றவற்றை முதற்கட்டமாக ஆய்வு செய்யும் இன்சைட் விண்கலம், தொடர்ந்து அந்த கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்த உள்ளது. இதன்மூலம் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் திரவங்கள் ஏதும் உள்ளதா அல்லது திடநிலையிலேயே உள்ளதா என தெரிய வரும் என நாசா தெரிவித்துள்ளது.

இன்சைட் விண்கலம் செவ்வாய்யில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ள 8-வது விண்கலமாகும். இரண்டு ஆண்டு ஆயுட்காலம் கொண்ட இன்சைட் விண்கல திட்டத்திற்காக 850 மில்லியன் டொலர் தொகையை நாசா செலவு செய்துள்ளது. இந்த ஆய்வுகளைக் கொண்டு அடுத்து ஓராண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்