சம்பள உயர்வு குறித்து முதலாளிமார் சம்மேளனம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை - முதலாளிமார் சம்மேளனம்

by Staff Writer 26-11-2018 | 9:22 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான எவ்வித பேச்சுவார்த்தையும் இன்று நடைபெறவில்லை என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. சம்பள உயர்வு தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தையில் நிதி அமைச்சின் செயலாளர், துறைசார் அமைச்சர் மற்றும் முதலாளிமார் சம்ளேன உறுப்பினர்கள் இன்று பங்கேற்கவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இத்தகைய பேச்சுவார்த்தைக்கான அழைப்பு தமது தரப்பிற்கு விடுக்கப்படவில்லை என முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை நியூஸ்பெஸ்டுக்கு குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தொழிலாளர்களுக்கு 940 ரூபா வரை நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் அந்தத் தீர்மானத்தில் எத்தகைய மாற்றமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் தேயிலை விற்பனை குறைவடைந்துள்ளதால், இதனைவிட கூடுதலான தொகையை வழங்கமுடியாது என ரொஷான் இராஜதுரை மேலும் தெரிவித்துள்ளார். அடிப்படை சம்பளம் என்பது ஒரு மாதத்திற்கு மாத்திரம் உரியதல்ல எனவும் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய தொகையையே தமது தரப்பு அறிவித்துள்ளதாகவும் ரொஷான் இராஜதுரை குறிப்பிட்டார். இன்று நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் அறிவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவுடன் தொடர்புகொள்வதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.    

ஏனைய செய்திகள்