ஜனாதிபதியின் கூற்றுக்கு தவிசாளர் கபீர்ஹாஷிம் பதில்

ஜனாதிபதியின் கூற்றுக்கு ஐ.தே.கவின் தவிசாளர் கபீர் ஹாஷிம் பதில்

by Staff Writer 26-11-2018 | 8:09 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சர்வதேச ஊடகங்களுக்கு வௌியிட்ட கருத்துக்களுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாஷிம் பதிலளித்துள்ளார். கடந்த அரசாங்கம் எந்த வகையிலும் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமாகாது என கபீர் ஹாஷிம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தினதும் அப்போதைய அரசாங்கத்தின் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவையினதும் தலைவர் என்பதால் கடந்த மூன்றரை வருடங்களாக இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் ஜனாதிபதியும் சம பொறுப்பை ஏற்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்தமை தொடர்பில் நன்றி தெரிவித்துள்ள அவர், அந்த ஆணைக்குழு ஜனாதிபதி தொடர்பிலும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மை கிடைத்தாலும் வாழ்நாளில் மீண்டும் ஒருமுறை அவருக்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள தீர்மானம் குறித்தும் கபீர் ஹாஷிம் தனது அறிக்கையில் கவனம் செலுத்தியுள்ளார். ஜனாதிபதியின் குறித்த கூற்று பாராளுமன்ற ஜனநாயகத்தை மீறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் தனது தனிதப்பட்ட குரோதங்களை தீர்ப்பதற்காக அரசியலமைப்பைப் பயன்படுத்தக்கூடாது எனவும் கபீர் ஹஷீம் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவை வாழ்நாள் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்தவில்லை எனவும் இன்னும் 12 மாதங்களில் அவரது பதவிக் காலம் முடிவுக்கு வரும் எனவும் கபீர் ஹாஷிம் மேலும் தெரிவித்துள்ளார்.