சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருந்தோட்ட மக்கள்

மனிதசங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

by Staff Writer 26-11-2018 | 2:24 PM
Colombo (News 1st) மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில், 1,000 ரூபா சம்பளத்தைக் கோரி மனித சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தலவாக்கலை, அக்கரப்பத்தனை, லிந்துலை, டயகம, மன்ராசி, ஹோல்புரூக் உள்ளிட்ட தோட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெருந்தோட்ட மக்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் தலவாக்கலையிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக நியூஸ்​பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். தலவாக்கலையிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். கண்டி - கெலாபொக்க, டீ மலை, சோளங்கந்த, அலகொல, கலகிரிய, எலுகஸ், நடுக்கணக்கு உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட தோட்டங்களிலுள்ள பெருந்தோட்ட மக்கள் இவ்வாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்புநிற ஆடைகளை அணிந்து, கறுப்பு நிற துணிகளை தலையில் அணிந்த வண்ணம் மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். மாத்தளை மாவட்டத்தின் றத்தோட்டை, நடுத்தோட்டம், பம்பரகல உள்ளிட்ட தோட்டங்களிலும் இன்று மக்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், 1,000 ரூபா சம்பளத்தைக் கோரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். நடுத்தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலிருந்து பேரணியாக சென்ற மக்கள், ரிவர்ட்ஸ்டன் பாலம் வரை சென்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார். இதனால், சுமார் 2 மணித்தியாலங்கள் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அதேநேரம், இதன்போது டயர்கள் எரிக்கப்பட்டதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் மேலும் கூறினார். இதேவேளை, நுவரெலியா - கந்தபொல , பார்க் தோட்டம், கொங்கோடியா கோட்லோஜ், எதர்செட், எஸ்கடேல், நோனா தோட்டம், சமர்ஹில் உள்ளிட்ட தோட்டங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கந்தபொல நகரிலுள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் பெருந்தோட்ட மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். வர்த்தக நிலையங்களிலும் கறுப்பு கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அதேநேரம், மஸ்கெலியா நகரிலும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பளத்தைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சாமிமிலை, மறே, நல்லதண்ணி, லக்ஸபான, ப்ரவுன்லோ ஆகிய தோட்டங்களிலும் ஆயிரம் ரூபா சம்பளம் கோரி இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது. இதேவேளை, கம்பளை - புசல்லாவ, காலி - ஹினிதும பகுதிகளிலுள்ள தோட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.