by Staff Writer 25-11-2018 | 2:49 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்படிருந்த சுனில் சாந்த என்ற சந்தேகநபர், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்தே தப்பிச்சென்றுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கேகாலை சிறைச்சாலையிலிருந்து கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் குறித்த சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் அதிகாரிகள் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், சிறைச்சாலையிருந்து தப்பிச்சென்றுள்ள சந்தேகநபர் படகு மூலம் வௌிநாட்டுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, சந்தேகநபர் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணையின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட 10 வழக்குகளுடன் தொடர்புடைய சுனில் சாந்த என்ற சந்தேகநபர், கடந்த 7ஆம் திகதி சிறைச்சாலையிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
எனினும், கடந்த 10 ஆம் திகதியே சம்பவம் தொடர்பில் கண்டறியப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.