பக்குவமற்ற துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய இலங்கை 

இங்கிலாந்திற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட்: பக்குவமற்ற துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய இலங்கை 

by Staff Writer 24-11-2018 | 9:06 PM
Colombo (News 1st) இலங்கை வீரர்களின் பக்குவமற்ற துடுப்பாட்டம் இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்துள்ளது. இலங்கையின் முதல் இன்னிங்ஸில் 53 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டமை அதனை மெய்ப்பிக்கின்றது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாளான இன்று 7 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்களுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து 336 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. லக்ஷான் சந்தகேன் 5 விக்கெட்களை வீழ்த்தியதோடு, இது டெஸ்ட் அரங்கில் அவர் 5 விக்கெட் பெறுதியை பதிவு செய்த இரண்டாவது சந்தர்ப்பமாகப் பதிவானது. முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 31 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. என்றாலும், நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா மற்றும் திமுத் கருணாரத்ன ஜோடி 142 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தியது. திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 73 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி ஒரு கட்டத்தில் 187 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து சற்று சவாலான நிலையில் இருந்தது. எனினும், அஞ்சலோ மெத்தியூஸ் , நிரோஷன் திக்வெல்ல , டில்ருவன் பெரேரா, ரொஷேன் சில்வா உள்ளிட்ட 6 வீரர்களால் 5 ஓட்டங்களுக்கு மேல் பெற முடியவில்லை. இதனால் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 240 ஓட்டங்களுடன் முடிவுக்கு வர, இங்கிலாந்து 96 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. இன்று மாலை வேளையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.